Wednesday, December 22, 2010

Cross – Language Information Retrieval

கூகிளின் இணைய மொழிமாற்றி [CLIR]

இன்று எத்தனையோ விதமான அறிவியல் நுட்பத் தகவல்களும், கணனிசார் பதிவுகளும், எண்ணற்றக் கற்கை நெறிகளும் இணையத்தில் குவிந்துக் கிடக்கின்றன. ஆனால் இவைகள் அதிகமாக ஆங்கிலத்திலேயே இருக்கின்றன. ஆங்கில அறிவு அற்றவர்களுக்கோ அவற்றின் முழுமையான பயனை பெறமுடியாமல் இருக்கின்றது. ஏன் தமிழர்களது நம்பகமான ஆங்கில இணையதளம் தமிழ்நெட் கூட பார்க்க முடிவதில்லை என்ற கவலை பலருக்கு இருக்கிறது.

உதாரணமாக "தமிழ்நெட்" இணையத்தளத்தின் இணைய முகவரியை (www.tamilnet.com) இட்டால் அத்தளம் தமிழில் காட்சி தருகிறது என வைத்துக்கொள்வோம் எப்படியிருக்கும்...? ஆம்! ஆங்கிலமே அவசியமில்லாமல் போய்விடும். அனைத்து ஆங்கிலத் தளங்களையும் தமிழிலேயே மொழிமாற்றி வாசித்துவிடலாம். ஆங்கிலம் அல்லாத உலக மொழிகள் அனைத்தையுமே தமிழில் மொழிமாற்றி வாசித்துவிடலாம்.

என்ன நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறதா?

ஆம்! அப்படியான ஓர் வசதியை விரைவில் Google ஏற்படுத்தித் தரப்போகிறதாம்.

Cross – Language Information Retrieval [CLIR] எனப்படும் கூகிளின் இணைய மொழிமாற்று வசதியை, கூகிள் நிறுவனம் கடந்த 2007 மே மாதம் அறிமுகப்படுத்தியது. அதன் ஆரம்பக் கட்டமாக தற்போது ஆங்கிலத்துடன் 12 மொழிகளை மொழிமாற்றும் வசதியை கூகிள் ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்கும் இந்த வசதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது நாம் எழுதிய ஒரு பகுதியை அல்லது நாம் வாசித்து அறிய விரும்பும் ஒரு பகுதியை Copy Paste செய்து, எந்த மொழியிலிருந்து, எந்த மொழிக்கு என்று தெர்வுசெய்து, "Translate" எனும் சுட்டியை அழுத்தி, நாம் விரும்பும் மொழியில் வாசித்துக்கொள்ளலாம்.

Translate a Web Page எனும் தேர்வூடாக ஓர் இணையத்தள முகவரியை இட்டு, அந்த இணையத்தளத்தின் அனைத்து உள்ளடக்கங்களையும் இன்னுமொரு மொழியில் மொழிமாற்றம் செய்து பார்க்கவும் முடியும்.

நான் ஒரு சீன மொழி இணையத்தள முகவரியை இட்டு Chinese to English என தேர்வு செய்து பரீட்ச்சார்த்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! சீன மொழியில் தென்பட்ட இணையத்தளம் ஆங்கிலத்தில் அருமையாக காட்சியளிக்கிறது.

இதுதான் அந்த சீன இணையத்தளம். (மொழிமாற்றும் முன்)


மொழிமாற்றிய பின், ஆங்கிலத்தில் இவ்வாறு காட்சியளிக்கிறது.


என்ன தமிழுக்கும் இவ்வாய்ப்பு கிடைத்தால் ஒரு கை பார்த்துவிடாலாம் என்கிறீர்களா!

அது சரி! அவ்வாய்ப்பை கூகிள் விரைவில் வழங்கும் என்று கூகிள் ஆண்டவரை வேண்டிக்கொள்வோம். அதுவரை பிற மொழிகளை மொழிமாற்றி பார்ப்போம் வாருங்கள்.

http://translate.google.com/translate_t

Google

கூகிளும் அதன் வரலாற்றுப் பாதையும்

இன்றைய இணைய உலகிள் கூகிள் எமக்குத் தரும் சேவைகளோ ஏராளம் ஏராளம்.

எனவே இந்த கூகிள் நிறுவனத்தையும் அதன் வரலாற்றையும் ஒரு சிறிய பார்வையிடுவோம்.

கலிபோர்னியா (Stanford University) இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ஜி பிரின் (Sergy Brin) லெரி பேஜ் (Larry Page) எனும் இரண்டு கலாநிதிப் பட்டப்படிப்பு மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்ட ஒரு ஆராய்ச்சிக்காக தொடங்கிய ஒரு முயற்சியே கூகிள் எனும் தேடு இயந்திரம் தோன்றுவதற்கு வழிவகுத்தது எனலாம்.

இது இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஆராச்சிக்கான ஒரு விடயமாக மட்டும் இருந்தப்போதிலும், சேர்ஜி பிரின் மற்றும் லெரி பேஜ் இருவரும் இந்த ஆய்வை ஒரு தேடு இயந்திரத்திற்கான ஆய்வாக முன்னெடுத்தனர். தேடப்ப்படும் ஒரு சொல் அல்லது விடயம் எந்தெந்த இணைய பக்கங்களிலிருந்தாலும் அதை அலசி ஆராய்ந்து நமது தேடலுக்குறிய பக்கங்களை தேடுபதிலாக பட்டியலிடும் தொழில் நுட்ப முறையைச் சிறந்ததாக இவர்கள் கருதினர். இது இவர்களின் இசுடான்போர்ட் பல்கலைக்கழகத்தின் தமது பட்டப்படிப்பிற்கான ஆராய்ச்சியாக மட்டும் இருந்தப் போதிலும், ஆராய்ச்சியின் பயனாக இஸ்டான் போர்ட் பல்கலைக்கழகத்தின் பக்கங்களை தேடுவதற்கான ஒரு தேடு இயந்திரமாக "google.standford.edu" எனும் (டொமைன்) பெயரில் பாவனைக்கு உள்ளானது.

அதன் பின்பு இவ்விருவரும் 1998 ஓகஸ்ட் மாதம் தமது நண்பர் ஒருவரது வீட்டு வாகன நிறுத்தகத்தில் அதிகாரபூர்வமாக கூகிள் நிறுவனத்தை வர்த்தக நோக்குடன் ஆரம்பித்தனர். அதே மாதம் 1998 ஆகஸ்ட் 15 ம் நாள் இந்நிறுவனத்திற்குhttp://www.google.com/ எனும் பெயரும் பதிவுசெய்யப்பட்டது. இவர்களின் இப்புதிய நிறுவனத்தின் முதலீட்டிற்காகப் பலரை அணுகினர்.

இறுதியில் ஒருவாறு 1.1 மில்லியன் டொலர்களை தேடிக்கொண்டு கூகிளின் செவையை தொடர்ந்ததனர்.

வாகன நிறுத்தகத்திலிருந்த இந்நிறுவனம் 1999 மார்ச் மாதம் Silicon Valley எனும் இடத்திற்கு இடமாற்றப்பட்டது. இந்நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் ஏற்பட்ட இடப்பற்றாக்குறைவு; இந்நிறுவனத்தை வேறு ஒரு பெரிய கட்டிடத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. அதனால் 2003 ம் ஆண்டு வேறு ஒரு கட்டிடத்தை வாடகைக்குப் பெற்றனர். அந்த கட்டிடத்திற்கு Googleplex என்று பெயரிட்டனர். 2006 ம் ஆண்டு அதேக் கட்டிடத்தை 319 மில்லியன் டொலர்களுக்கு கூகிள் நிறுவனம் விலைக்கு வாங்கிக்கொண்டது. கூகிளின் தேடு இயந்திர தொழில் நுட்பம் 2001 செப்டம்பரில் காப்புரிமை செய்யப்பட்டது. அத்துடன் இஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் அதிகாரபூர்வ காப்புரிமையிலும் பட்டியலிடப்பட்டது. 2004 ஆகஸ்ட் 19 ம் நாள் கூகிள் நிறுவனத்தை ஒரு பொது நிறுவனமாக பதிவு செய்துக்கொள்ளப்பட்டது. கூகிள் தமது தேடு இயந்திரத்தினூடாக புதியப் புதிய மாற்றங்களைச் செய்து இணைய பாவனையாளர்களை வெகுவாக கவரத்தொடங்கியது. 2000 ம் ஆண்டிலிருந்து தேடு இயந்திரத்தில் தேடப்படும் சொல் அல்லது விடயம் தொடர்பானத் தேடுபதில்களுடன் விளம்பரங்களையும் கூகிள் நிறுவனம் காட்சிப்படுத்தி அதனூடாகவும் வருமானத்தை ஈட்டத் தொடங்கியது. 2007 செப்டம்பர் 30 ம் நாள் கணக்கெடுப்பின் படி இந்த நிறுவனத்தின் முழுநேரப் பணியாளர்கள் 15, 916 இருக்கின்றனர். NASDAQ இல் பட்டியலிடப்பட்டப் பொது நிறுவனங்களில் கூகிள் நிறுவனமே பெரியதாகும். லெரி பேஜ் , சேர்ஜி பிரின் ஆகிய இவர்களால் உருவாக்கப்பட்ட கூகிள் NASDAQ பங்குச்சந்தையில் 2004 ஓகஸ்ட் 19 ம் நாள் 1.67 பில்லியன் டொலர்களுக்கு பங்குகள் விற்பனையாகின. அத்துடன் 23 பில்லியன் டொலர்களுக்கும் மேலாக கூகிள் நிறுவனம் மதிப்பாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று பல நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப்போதும் 87% வீதமானோர் கூகிள் தேடு இயந்திரத்தையே பாவிக்கின்றனர் எனக் கணிப்புகள் கூறுகின்றன.

இன்று Google எனும் பெயர் பிரசித்தி பெற்று இருந்தாலும்; "Googol" எனும் பெயரே எழுத்துப்பிழையாக "Google" என தட்டச்சு செய்யப்பட்டு விட்டதால், "Google" எனும் பெயரே பதிவுச்செய்யப்பட்டு தற்போதும் நிலைத்து நிற்கிறது.Googol என்றால் 1 ன்றுடன் 100 பூச்சியங்களை இணைத்தால் வரும் எண்ணிக்கையை குறிக்கும் தொகைக்கான சொல்லாகும். எப்படியோ Googol எனும் வார்த்தை Google என்று தவறாக தட்டச்சப்பட்டது என்றாலும், "Google" எனும் இவ்வார்த்தை இன்று உலகளவில் எல்லா மொழிகளிலுமே பயன்படும் ஒரு சொல்லாக நிலைத்துவிட்டது.

இச்சொல்லை 2006 ல் ஒக்ஸ்போர்ட் அகராதியில் "இணையத்தில் தகவல்களை தேடுவதற்கான ஒரு தொழில் நுட்பச் சொல்" என்று இணைக்கப்பட்டுள்ளது.

எப்படியோ இன்று இணையத்தில் நூற்றுக்கணக்கான தேடு இயந்திரங்கள் தோன்றியுள்ளப் போதும். எல்லோரது மனதிலும் நின்று நிலைத்து விட்ட ஒரு தேடு இயந்திரம் “கூகிள்” ஆகும். ஒரு நாளைக்கு பல பில்லியன் வார்த்தைகளைக் கண்ணிமைக்கும் நேரத்தில் தேடித்தரும் தேடு இயந்திரமாக எல்லோர் மனதிலும் பதிந்து விட்டது.

அத்துடன் நின்றுவிடாது; புதிய பொருட்களின் வடிவமைப்பு, மற்றைய நிறுவனங்களை கொள்முதல் செய்தல், பங்குதாரர்கள், விளம்பரங்கள், வியாபார யுக்திகள் என இணையத்தில் பல்துறைகளிலும் புகுந்து விளையாடுகிறது.

William Henry Bill Gates III)

மைக்ரோசொப்ட் பில் கேட்ஸ் அவர்கள்

பில் கேட்ஸ் (William Henry Bill Gates III) என்றால் இன்றைய உலகில் தெரியாதவர்கள் இருக்கமுடியாது. கடந்த இரண்டுத் தலைமுறைகளில் பில் கேட்ஸ் அளவிற்கு உலக மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய எவரும் இருக்க முடியாது. உலகின் போக்கையே மாற்றியமைத்துவிட்ட சாதனையாளர். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தலமைக் கணனி மென்பொருளாரும், அதன் தலமை நிறைவேற்று அதிகாரியும் ஆன பில் கேட்ஸின் தற்போதைய வயது 52. உலக பணக்காரர்கள் வரிசையில் “பில் கேட்ஸ்” தொடர்ந்து பல வருடங்களாக முதலிடத்திலேயே இருந்து வருகிறார். 1999 களிலேயே இவரது சொத்தின் மதிப்பு 100 பில்லியன்கள் ஆகும். இன்று இவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகெங்குமாக 78,000 பேர்கள், 105 நாடுகளில் சேவை புரிகின்றனர்.

வாழ்க்கை வரலாறு

பில் கேட்ஸ் 1955 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் நாள் அமெரிக்கா, சியேட்ல், வொசிங்டன் (America, Seattle, Washington) எனும் நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் 'வில்லியம் கெச் கேட்ஸ்' அவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். தாயாரின் பெயர் 'மேரி மேக்ஸ்வெல்' வொசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆசிரியை ஆவார். இவர்களின் மகனான பில் கேட்ஸ் சிறு வயதிலேயே கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்து விளங்கியுள்ளார். பில் கேட்ஸ் தனது பதி்மூன்றாவது வயதில் சியாடில் பகுதியில் சிறந்தப் பாடசாலையான லேக்சைட் பாடசாலைக்கு மாற்றம் பெற்றார். அங்கு கல்வி கற்கும் காலங்களில் இவரது கணனி ஆர்வமும் திறைமையும் ஆசிரியர்களால் இனங்காணப்பட்டது. சிறு வயது முதலே மென்பொருள் எழுதுவதில் ஆர்வமுள்ளவரானார்.

13 வயதான அக்காலத்திலேயே மென்பொருள் எழுதவும் தொடங்கிவிட்டார்.

1973 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) சென்றார். அங்கே இஸ்டீவ் பாள்மர் என்பவர் இவரது நண்பரானார். இஸ்டீவ் பாள்மரின் வீட்டில் இருந்தே படித்தார். இருப்பினும் இவரது ஆர்வம் கணனி மென்பொருள் எழுதுவதிலேயே இருந்தது.

1975 ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகக் கல்வி முற்று பெற்றப் பின் தனது சிறு வயது நண்பரான பவுல் எலன் (Paul Allen) என்பவருடன் இணைந்து மைக்ரோசொப்ட் நிறுவனத்தை ஆரம்பித்தார். கணனித்துறை பிற்காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் எனும் தீர்க்கத்தரிசனம் இவருக்குள் இருந்ததோ என்னவோ, இவரும் இவரது நண்பரும் இணைந்து மென்பொருள்களை மும்முரமாக எழுதினர். இவருடைய இத்தொலை நோக்குச் சிந்தனைத்தான் பிற்காலத்தின் இவருடைய அபார வெற்றிகளுக்கு வழிவகுத்தது எனலாம்.

இன்றை உலகில் சாதாரணக் கணனி பாவனையாளர் முதல் அலுவலகங்கள், நிறுவனங்கள் வரை மைக்ரோசொப்ட்டின் மென்பொருள் இன்றி ஒன்றுமே செய்ய முடியாத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது. கணனி இயங்குத் தளங்களை (ஒப்பரேடிங் சிஸ்டம்) பொருத்தவரையிலும் 85% சதவீதமானவை மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இயங்கு தளங்களாகவே உள்ளன. மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் "விண்டோஸ் XP" ஒரு புரட்சியையே ஏற்படுத்திய இயங்கு தளமாகும். மைக்ரோசொப்ட்டின் கடைசியான இயங்குதளமான “விண்டோஸ் விஸ்டா” 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதனைக் கிட்டத்தட்ட 6 ஆண்டுகள், 600 கோடி டொலர்கள் செலவில், 5000 கணனி மென்பொருள் வல்லுநர்கள் உழைப்பில் உருவாகியுள்ளது. இதில் 300 இந்திய கணனி மென்பொருள் வல்லுநர்களும் செயலாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இன்றையக் கணனி உலக நுட்ப வளர்ச்சிக்கும், அறிவியல் மாற்றத்திற்கும் பில் கேட்ஸ் அவர்களின் தனிமனிதத் திறமையும், மைக்ரோசொப்ட் நிறுவனத்தினதும் பங்கும் அளப்பரியது. பொருளாதாரத் துறையை எடுத்துக்கொண்டாலும் இன்றைய உலகின் "பொருளாதாரத் தந்தை" என்று பில் கேட் அவர்களையே குறிப்பிடலாம் என கூறுவோரும் உளர்.

பில் கேட்ஸ் எழுதிய நூல்கள்

பில் கேட்ஸ் "கொலின்ஸ் எமிங்வே" (Collins Hemingway) என்பவரும் சேர்ந்து எழுதிய “Business @ the speed of Thought” எனும் நூல் 25 மொழிகளில் வெளியாகி பெரும் பறப்பறப்பை ஏற்படுத்தியது. இந்நூல் பல பத்திரிக்கைகளினதும் சஞ்சிகைகளினதும் பாராட்டுக்களை பெற்றது. பில் கேட்ஸின் “The Road Ahead' எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு அதுவும் பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஒரு தொழிலதிபராக மட்டுமன்றி, எழுத்துலகிலும் தடம் பதித்தவர் பில் கேட்ஸ்.

இந்நூல்கள் மூலம் இவர் பெற்ற இலாபத்தை தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும், இலாப நோக்கற்று இயங்கும் நிறுவனங்களிற்கும் நன்கொடையாகக் கொடுத்தார்.

இவற்றைத் தவிர உலகம் முழுவதும் வாழும் மக்களின் கல்வி மற்றும் சுகாதார அபிவிருத்திக்கான நிறுவனம் ஒன்றைத் திறந்து அதற்கு பல பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டு பணியாற்றியும் வருவதாக செய்திகள் கூறுகின்றன. இந்நிறுவனத்திற்கு "பில் எண்ட் மெலிண்டா கேட் பவுண்டேசன்” எனப் பெயரிட்டுள்ளார். "மெலிண்டா" என்பது இவரது துணைவியாரின் பெயராகும்.

இதோ தளமுகவரி:http://www.gatesfoundation.org/Pages/home.aspx

இருவரும் இணைந்தே இந்நிறுவனத்தை நடாத்தி வருகின்றனர்.

இன்று நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் கைகளில் எல்லாம் கணனி தவழ்கின்றது என்றால் அதற்கான ஆரம்ப வித்திடவர் பில் கேட்ஸ் என்றே கூறவேண்டும். உண்மையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கணனி அறிமுகமாகியதன் பெரும் பங்கு பில் கேட்ஸையும் அவரது மைக்ரோசொப்ட் நிறுவனத்தையுமே சாரும்.

Quick Search Box

எம் எஸ் வேர்டில் தேடல் (Quick Search Box)

எம் எஸ் வேர்டில் வேலை செய்துக்கொண்டிருக்கும் பொழுது உடனடியாக ஒரு சொல்லைப் பற்றியோ, விடயத்தைப் பற்றியோ தேடுதல் செய்யவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நாம் வேலை செய்துக்கொண்டிருக்கும் எம் எஸ் வேர்ட்டிலேயே கூகிள் தேடலை தொடர முடியும்.

எப்படி என்று பார்ப்போமா?

மிக இலகுவானது கொண்ட்ரோல் Ctrl கீயை இரண்டு முறை தட்டுங்கள். [Quick Search Box] மேலே காட்டப்பட்டவாறு தோன்றும். பிறகு என்ன அதனூடாகவே கூகிள் தேடல்களைத் தொடர வேண்டியதுதான்.


மீண்டும் Ctrl இரண்டு முறைத் தட்டினால் கூகிள் தேடு இயந்திரம் மறைந்துவிடும்.

குறிப்பு:

உங்கள் கணனி இணையத்துடன் இணைக்க்கப் பட்டிருக்க வேண்டும்.